புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள்
*பயணிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அடிப்படை வசதிகள் குறைபாடு காரணமாக, முழுவதுமாக இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டு, நீண்ட இழுபறிக்குப்பின் கடந்த மே 2ம் தேதி கவர்னர், முதல்வர் திறந்து வைத்தனர்.
இப்புதிய பேருந்து நிலையத்தில் 42 கடைகள், உணவகங்கள், பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல நடைமேடைகள், பயணிகள் வெயிட்டிங் ஹால், செல்போன் சார்ஜிங் பாயிண்ட், கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எந்தெந்த பஸ்கள் எங்கெங்கு நிற்கும் என்பதை அறிவிக்கும் டிஜிட்டல் பெயர் பலகை உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த பொலிவுறு பேருந்து நிலைய முனையமாக அமைக்கப்பட்டுள்ளது.
கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 4 மாதமாகியும் இன்னமும் கடைகள் திறக்கப்படவில்லை. பால், டீ, பிஸ்கட், பிரட் உள்ளிட்டவை மட்டும் அரசு சார்பு நிறுவனங்களான பாண்லே, லேகபே கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
புதுச்சேரி பேருந்து நிலையத்தை பொருத்தவரை சென்னை பஸ்களுக்கு அதிக தேவை இருக்கிறது. சென்னை பஸ்களுக்கு ஏற்கனவே இருந்த இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், நடைமேடைகள் கட்டப்படவில்லை. இதனால் சென்னை செல்லும் பயணிகள் மழை, வெயிலில் காத்திருந்து ஏற வேண்டியுள்ளது.
மேலும், சென்னை பஸ்கள் நிற்கும் பகுதியில் தான் புதுச்சேரி அரசின் போக்குவரத்து கழகம் (பிஆர்டிசி), தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் டெப்போ) டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன. புதுப்பித்து கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் நிற்கும் முன்புற பகுதியில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்டதூர பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்து டிக்கெட் கவுன்டர்கள் அதிக தொலைவில் இருப்பதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஏற்கனவே இருந்த சென்னை பஸ்கள் நிற்கும் இடத்திலேயே டிக்கெட் கவுன்டர்களை திறக்க வேண்டும் என பயணிகள் தொட ர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, தற்போது சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் கட்டப்பட்டுள்ளன.