புதுச்சேரியில் இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி: கண்டுகளித்த முதலமைச்சர், துணைநிலை ஆளுநர்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்படை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பலரை மெய்மறக்க செய்துள்ளது. திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை இசை நிகழ்ச்சிகளை பார்த்யிருப்போம், அதில் இருந்து சற்று தனித்துவமுடைய இசை நிகழ்ச்சி ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. நாட்டை பாதுகாக்கும் கடற்படையின் இசை கலைஞர்கள் அரங்கேற்றப்பட்ட இசை நிகழ்ச்சிதான் அது. சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் இந்தியக் கடற்படை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
கமாண்டர் சதீஷ் சாம்பியான் தலைமையிலான இந்தியக் கடற்படையை சேர்ந்த 18 இசை கலைஞர்கள் பல்வேறு இசை கருவிகளை வசித்து பலரையும் மெய்மறக்க செய்தனர். இசை நிகழ்ச்சியில் தேசிய கீதம், வந்தே மாதரம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தமிழ் திரைப்பட பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. தமிழா தமிழா நாளை நாம் நாடே, ஜெய் ஹோ, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட 13 பாடல்கள் இசைக்கப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.