புதுச்சேரி நகரப் பகுதிகளில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை: கிராமப்புறங்களில் மின்சார, குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறின. சோரியான் குப்பம், ஆராய்ச்சி குப்பம், பர்கூர், இருளன் சந்தை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும் அதனையொட்டி உள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. அந்த பகுதிகளில் இருந்து சுமார் 4000 பேர் வெளியேற்றப்பட்டு நிவாரணம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை குறைந்தாலும் வடியாத வெள்ளத்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிராமங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வீடுகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றனர். வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, பீரோ, நாற்காலி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. 3 நாட்கள் ஆன பிறகும் மின்சாரம், குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சோழியமேடு, அரங்கனூர், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் வெள்ள காடாக மாறின. பாகூர், காரிகளப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஆறுகளாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திய துயரத்தில் இருந்து மீள புதுச்சேரி மக்கள் போராடி வருகின்றனர்.