திருக்கழுக்குன்றம் அருகே குடியிருப்பில் இயங்கும் தனியார் தொழிற்சாலை நெடியால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல்: அதிகாரிகள் அலட்சியம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தொழிற்சாலையை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த (மதுராந்தகம் செல்லும் சாலை) முடையூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த, குடியிருப்புகளுக்கு மத்தியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பேப்ரிகேஷன் நிறுவனம், பெரிய கம்பெனி ஒன்றை ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தின்போது, இந்த இடத்தில் கம்பெனி அமைக்கக் கூடாது என்று முடையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களின் பயங்கர எதிர்ப்பையும் மீறி, அதிகாரிகள் அலட்சியத்தால் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. குடியிருப்பு மற்றும் பள்ளிக்கூடம், அங்கன்வாடி, மையம், நூலகம் ஆகியவை மத்தியில் இந்த கம்பெனி இயங்கி வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இந்த கம்பெனியை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் முதல் முதலமைச்சர் வரை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஆண்டாண்டு காலமாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து எங்களது குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த கம்பெனி இயங்கி வருகிறது. இரவும், பகலும் இந்த கம்பெனி இயக்கத்தின் சத்தம், காதை பிளக்கிறது.
இதனால் பகலில் அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிப்படுவதால், அவர்களது கல்வித்தரம் கேள்விக்குறியாகிறது. இரவில் இந்த சத்தத்தால் தூக்கம் கெட்டு ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகிறோம்.
அதுமட்டுமின்றி பெயின்ட்டின் நெடியினால் மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவற்றிற்கு ஆளாகிறோம். மேலும், முடையூர் ஏரிக்குச் செல்லும் கால்வாயையும், இந்த கம்பெனியினர் ஆக்கிரமித்துள்ளனர்.
குடியிருப்புகளுக்கு நடுவே பொதுமக்களுக்கு தொந்தரவாகவும், சிரமமாகவும் இயங்கி வருகின்ற இந்த கம்பெனியை அகற்றக்கோரி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும், பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளிக்கும் போதெல்லாம் சில அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் கம்பெனிக்கு வந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு தங்களது பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு சென்று விடுகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் இதுபோன்று கம்பெனியை வைக்க அனுமதி அளித்ததே தவறு. எனவே, உடனடியாக இந்த கம்பெனியின் இயக்கத்தை நிறுத்தாவிட்டால், பொதுமக்களாகிய நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.