பொதுக்கூட்டம், பிரசாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க 6ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
சென்னை: பொதுக்கூட்டங்கள், பிரசாரம் செய்ய வழிநாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து வருகிற 6ம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடிகர் விஜய் பிரசாரம் செய்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். 180க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் கொடுத்த நிபந்தனைகளை பின்பற்றாமல் இருந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மாலை 3 மணி முதல் 10 மணிவரை கூட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டு, பகல் 12 மணிக்கு நடிகர் விஜய் வருவதாக தவெக தரப்பில் அறிவிப்பு வெளியிட்டதால் காலை முதலே கூட்டம் அதிகமாக கூடத் தொடங்கியது.
ஆனால் நடிகர் விஜய் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், காலையில் இருந்து காத்திருந்த பெண்கள், குழந்தைகள் தண்ணீர் இல்லாமலும், உணவு அருந்தாலும் இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பலரும் மிதித்ததால் பலர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன், நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய் பிரசாரத்தால், தலைவர்களின் பிரசாரத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், முக்கியமான தலைவர்கள் பிரசாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் வருகிற 6ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடந்த அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் வருகிற 6ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் மூத்த அமைச்சர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்குபெறக்கோரி அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சார்பில் அழைப்புக் கடிதம் மேற்படி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.