திருவொற்றியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்: 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
சென்னை: சென்னை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு துறை சேவைகள் மற்றும் திட்டங்களை மக்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 10,000 இடங்களில் இந்த முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை திருவொற்றியூரில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முகாமில் 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காக மட்டுமே 1,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் படிவங்களை பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் வழங்கினார்.
புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட வடக்கு 3ம் வீதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொடைக்கானல் அருகே கே.சி.பட்டி மலைக்கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பல ஆண்டுகளாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு ஒரே நாளில் குடும்ப அட்டைகளை விநியோகிக்கப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.