முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பூட்டி வைக்கப்பட்டுள்ள கோயில் குளத்தை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் பூட்டி வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தை, புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக திறந்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசை தினத்தில் உயிர் நீத்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது இந்துக்களின் மரபு. அந்த வகையில், புரட்டாசி மாத மாகாளய அமாவாசை நாளை (21ம்தேதி) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நீர்நிலைகளில் உயிர் நீத்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்க, இந்துக்கள் தயாராகி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயிலான வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் குளக்கரையில் பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக கோயில் நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி, அனந்த சரஸ் குளத்தில் பக்தர்கள் யாரும் இறங்க முடியாத அளவிற்கு குளத்தின் இரும்பு கதவுகளை பூட்டு போட்டு வைத்து உள்ளது.
இதுகுறித்து கேட்கும் பக்தர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்பேரில் பூட்டு போட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாகாளய அமாவாசை தர்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அனந்த சரஸ் குளம் பூட்டு போட்டு உள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தர்ப்பணம் செய்ய உள்ள இந்துக்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசை தினத்தில் அனந்த சரஸ் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வசதியாக கோயில் திருக்குளத்தை திறந்து வைக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.