பொது சின்னம் கேட்டு 6 சின்னங்கள் பட்டியலுடன் தேர்தல் ஆணையத்தில் தவெக மனு
சென்னை: பொது சின்னம் கேட்டு, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில்நேற்று காலை, தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் மனுவை வழங்கினர். மனுவில், கட்சிக்கான 6 விருப்ப சின்னங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. ‘டிவி, கப்பல், விசில், ஆட்டோ, பேட்’ போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சின்னங்களில் 5 சின்னங்களை விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் மொத்தம் 184 சின்னங்களை பட்டியலிட்டுள்ளது. கட்சிகள் அதிலிருந்து குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட சின்னங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்து, ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்றதாக கருதப்படும் ஒரு சின்னத்தை ஒதுக்கும். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்திற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதத்திற்குள் அளிக்கலாம். அனைத்து மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு, சின்ன ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவு டிசம்பர் 2025 இறுதிக்குள் எடுக்கப்படும்.