கிளாஸை தொட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் விலை; கோவையில் ஒரு டீ ரூ.20, காபி ரூ.26: பொதுமக்கள் அதிர்ச்சி
கோவை: கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட பேக்கரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த சங்கத்துக்கு உட்பட்ட பேக்கரிகளில் டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விலை உயர்வு இந்த சங்கத்துக்கு உட்பட்ட கடைகளில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பேக்கரிகளில் இதுவரை ரூ.15 க்கு விற்கப்பட்டு வந்த டீயின் விலை ரூ.20 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்டு வந்த காபியின் விலை ரூ.26 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர இஞ்சி டீ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பால் பயன்படுத்தப்படாத பிளாக் டீ ரூ.17 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் கோவையில் உள்ள பெரும்பாலான பிரபல பேக்கரிகளில் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் டீ ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கோவையில் டீயின் விலை ரூ.20 ஆக உள்ளது. திடீரென டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
‘‘அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி குடிக்கும் பானங்களாக டீ மற்றும் காபி இருந்து வருகிறது. இந்நிலையில் திடீரென டீ மற்றும் காபியின் விலையை பேக்கரி உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர். சென்னையில் ரூ.12 ஆக இருந்த டீயின் விலை தற்போது ரூ.15 ஆக உயர்த்தியுள்ளார்கள். ஆனால் கோவையில் ஏற்கனவே ரூ.15 ஆக இருந்த டீயின் விலையை ரூ.20 ஆக உயர்த்தியுள்ளார்கள். ஒரு டீயின் விலை ரூ.20 என்பது மிகவும் அதிகப்படியாக இருக்கிறது. இதனால் கூடுதல் செலவு ஏற்படும். இது பலர் டீ குடிப்பதை குறைக்க வேண்டிய நிலையை உருவாக்கும்’’ என்றனர்.
கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது, ‘‘கோவையில் கடந்த 4 ஆண்டுகளாக டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது கடை வாடகை, ஊழியர்களுக்கான சம்பளம், மூலப் பொருள்களின் விலையேற்றம், மின்கட்டணம், வரி உள்ளிட்டவை காரணமாக விலையேற்றம் செய்யப்பட்டு உள்ளது’’ என்று அவர் கூறினார்.
சென்னையை விட விலை அதிகம் ஏன்?
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையை விட கோவையில் டீ விலை அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு சென்னையில் உள்ள டீக்கடைகள் பெரும்பாலும் சாலையோரக் கடைகளாக இருப்பதாலும், டீயின் அளவு மற்றும் தரம் காரணமாகவும் கோவையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என கோவை பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.