நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது ஒன்றிய அரசு..? பொள்ளாச்சி திமுக எம்.பி. ஈஸ்வரசாமி குற்றச்சாட்டு
டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக மூடுகிறது. இதனால் எண்ணற்றோர் அரசு வேலைகளை இழப்பதுடன் தனியார்மயத்தால் விலைவாசி உயர்வும் கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதை குறிப்பிட்டு முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் நஷ்டத்தில் இயங்குவதாக காட்டி பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு மூடுகிறது என திமுக மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை விலக்குவது குறித்து அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். மட்டுமின்றி பொதுத்துறை நிறூவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளார்.