அரசியல் பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!!
சென்னை: அரசியல் பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கரூரில் செப்.27ம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்களின் பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்க்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி, பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்து இருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் மற்றும் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. என்.ஆர்.இளங்கோ பங்கேற்றுள்ளனர். மேலும், அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, வி.சி.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், தேமுதிக சார்பில் சந்திரன், நல்லதம்பி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வீரபாண்டியன், மாரிமுத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் மௌரியா, செந்தில், மதிமுக சதன் திருமலைகுமார், பூமிநாதன் ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை கூட்டத்தில் தெரிவிப்பார்கள். அந்த கருத்துக்களின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.