ஜோலார்பேட்டை அருகே தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே தார்சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுசக்கரக்குப்பம் கிராமம் 3வது வார்டு போயர் வட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் சாலையானது மன்சாலையாக இருந்து வருகிறது.
இந்த சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் சாலையை கடந்து செல்வதில் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. தற்போது பருவமழை காரணமாக அந்த சாலை வழியாக சென்றுவர கடும் சிரமம் ஏற்படுவதால் உடனடியாக தார்சாலை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.