பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ்: 2 பேர் கைது
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சீத்தலை சாத்தனார் தெருவை சேர்ந்தவர் பாபிஜோஸ் (50), கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி பி.டி.ராஜன் சாலை வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்தனர். அதை மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அதே வாலிபர்கள் கே.கே.நகர் காவல் நிலையம் முன், பைக்கை நிறுத்தி வீடியோ எடுத்து, அவதூறான வாசகத்துடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஆதாரங்களுடன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறு வீடியோ பதிவு செய்த கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21), கோகுல் (22) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.