பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் குடும்பத்தையே கொலை செய்த சிறுவனுக்கு 100 ஆண்டுகள் தண்டனை :பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி
இஸ்லாமாபாத் : பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்த 17 வயது சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான பாகிஸ்தானின் லாகூர் நகரைச் சேர்ந்த செய்னலி என்ற சிறுவன், கடந்த 2022ம் ஆண்டு தனது 14 வயதில் நிகழ்த்திய கொடூர சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது. செல்போனில் பப்ஜி விளையாடி தோல்வியுற்று அதிருப்தியில் இருந்த சிறுவனை எந்நேரமும் பப்ஜி விளையாடுவதாக கூறி அவனது தாய் திட்டியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன், சிறிது நேரம் கழித்து, தனது தாயின் துப்பாக்கியை கொண்டு உறக்கத்தில் இருந்த அவரை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த 20 வயதுடைய தனது அண்ணனையும் 15 மற்றும் 10 வயதுடைய இரு சகோதரிகளையும் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் லாகூர் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சிறுவன் என்பதால் வயதை காரணம் காட்டி, மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.