பி.ஆர்.எஸ் கட்சிக்கு நன்கொடை பெரும் சரிவு: ரூ.580 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக குறைந்தது
ஐதராபாத்: தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதால், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் நன்கொடை ஒரே ஆண்டில் படுவீழ்ச்சி அடைந்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிக்கு கடந்த நிதியாண்டுகளில் கோடிக்கணக்கில் நன்கொடைகள் குவிந்தன. குறிப்பாக, 2022-23 நிதியாண்டில் ரூ.20,000க்கு மேற்பட்ட பங்களிப்புகள் மூலம் மட்டும் சுமார் ரூ.154 கோடி நன்கொடை பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2023-24 நிதியாண்டில் அக்கட்சிக்கு நன்கொடை உச்சத்தை தொட்டது.
அந்த ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.495.52 கோடி உட்பட, தேர்தல் அறக்கட்டளை நிதிகள் வழியாகவும் சேர்த்து மொத்தம் ரூ.580 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கிடைத்தது. ஹெட்டோரோ டிரக்ஸ் (ரூ.50 கோடி), எம்.எஸ்.என். பார்மாகெம் மற்றும் எம்.எஸ்.என். ஆய்வகங்கள் (ரூ.20 கோடி), டிவிஸ் ஆய்வகங்கள் (ரூ.20 கோடி) போன்ற மருந்து நிறுவனங்களும், ராஜபுஷ்பா குழுமம் மற்றும் மை ஹோம் இன்ப்ராஸ்டிரக்சர் போன்ற மனை வணிக நிறுவனங்களும் அக்கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவில் நன்கொடை வழங்கிய முக்கிய நிறுவனங்களாகும். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, நடப்பு 2024-25 நிதியாண்டில் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வரும் நன்கொடை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிதியாண்டில் இதுவரையில் அக்கட்சிக்கு வெறும் ரூ.15 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு கிடைத்த ரூ.580 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகக் கடுமையான வீழ்ச்சியாகும். தற்போது கிடைத்துள்ள ரூ.15 கோடி நன்கொடையில் பெரும் பகுதி தேர்தல் அறக்கட்டளை நிதிகள் வழியாகவும், மீதமுள்ள தொகை தனிநபர்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் இல்லாததால், பெரு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வந்த நிதி முற்றிலுமாக நின்று போனதே இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி, தற்போது தெலங்கானாவில் ஆட்சியை பறிகொடுத்து எதிர்கட்சியாகி உள்ளதால் நிதி கிடைப்பதில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.