பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா சஸ்பெண்ட்: தெலங்கானா அரசியலில் பரபரப்பு
திருமலை: தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா கட்சியின் எம்எல்சியாக உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கவிதா மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். பின்னர் ஜாமீனில் இருந்து வெளியே வந்ததில் இருந்து அவரது சகோதரர் ராமராவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனால் பிஆர்எஸ் கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேச தொடங்கினார். மேலும் கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ்ராவ் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். கவிதாவின் கருத்துகளுக்குப் பிறகு, எர்ரவல்லி பண்ணை வீட்டில் இருந்த கே.டி.ராமாராவ் மற்றும் பிற கட்சி மூத்த தலைவர்கள் கே.சந்திரசேகர் ராவுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்படியே விட்டுவிடுவது கட்சிக்கு மேலும் கெட்டபெயரை ஏற்படுத்தும் என்றும் மற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மேலும் குழப்பம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கே.சி.ஆரும் கே.டி.ஆரும் உணர்ந்தனர். இதனையடுத்து கவிதாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இந்த முடிவை நேற்று பிற்பகல் பி.ஆர்.எஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வடிவில் வெளியிட்டது.
அதில் கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இது தெலங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.