பி.ஆர்.எஸ். கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முயற்சி: சந்திர சேகரராவின் மகள் கவிதா பரபரப்பு குற்றசாட்டு
தெலுங்கானா: பாஜகவுடன் தங்கள் கட்சியை இணைக்க பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு உள்ளேயே கருப்பு ஆடுகள் இருப்பதாக அந்த கட்சியின் எம்.எல்.சியும் சந்திர சேகரராவின் மகளுமான கவிதா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். பி.ஆர்.எஸ் கட்சியில் மறைமுகமான உட்கட்சி பூசல் கவிதாவின் புகாரால் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக இருந்த கே. சந்திர சேகரராவ் 2022ல் முதலமைச்சராக இருந்த போது தேசிய அரசியலில் கால்பதித்ததற்காக தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றினார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணி போன்று தேசிய அளவில் 3வது அணியை அமைக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சி கைக்கொடுக்காததோடு தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பி.ஆர்.எஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் சந்திரசேகர ராவின் தீவிர அரசியல் செயல்பாடு படிப்படியாக குறைந்தது. தற்போது கட்சியின் செயல் தலைவராக சந்திர சேகரராவின் மகன் கே.டி.ராமா ராவ் செயல்பட்டு வருகிறார். கட்சியின் எம்.எல்.சி யாக மகள் கவிதாவும் உள்ளார். இந்த நிலையில் ராமாராவுக்கும் , கவிதாவுக்கும் இடையே அடுத்த தலைவர் யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கவிதாவுக்கு எதிராக கே.டி.ராமா ராவ் காய் நகர்த்துவதாகவும் தகவல்கள் வெளியாகின இந்த புகார்கள் வலுப்படுத்தும் விதமாக கவிதா பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். தம்மை மிகவும் ஆபாசமாக வசைபாடிய காங்கிரஸ் எம்.எல்.சி மள்ளனாவை அப்படி பேசவைத்ததே பி.ஆர்.எஸ் மூத்த தலைவர்கள் தான் என்று பரபரப்பு குற்றசாட்டை கவிதா முன்வைத்துள்ளார்.
எம்.பி தேர்தலில் தாம் தோர்ததற்கு தம் சொந்த கட்சியினரே காரணம் என்றும் பி.ஆர்.எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க கட்சிக்குள்ளேயே சதி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனால் கே.டி.ராமாராவுக்கும், கவிதாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கவிதா மீதான டெல்லி மதுபான வழக்கால் அவரை கட்சியின் தலைவராக விடக்கூடாது என்று சில மூத்த தலைவர்கள் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. மறுபுறத்தில் கே.டி.ராமா ராவ் மீதான பார்முலா முறைகேடு வழக்கிலிருந்து அவரை விடுவிக்க அதே மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் பேசப்படுகிறது. இதற்கிடையே சந்திர சேகரராவை சுற்றி சில பேய்கள் இருப்பதாக குறிப்பிட்டு தனது தந்தைக்கு அவர் எழுதிய கடிதம் கடந்த வாரம் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பி.ஆர்.எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக கவிதா குற்றசாட்டை முன்வைத்திருப்பது சகோதரர் ராமாராவுடனான மோதலை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.