போராட்டம், கலவரத்தால் நேபாளத்திற்கு பேருந்து சேவை திடீர் நிறுத்தம்
புதுடெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் வன்முறை, கலவரம் வெடித்துள்ளதால் கடந்த 3 நாட்களாக அங்கு அசம்பாவிதமான சூழல் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அது கலவரமாக மாறியது.
நாடாளுமன்றம் கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என மூத்த தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த மோசமான சூழலால் டெல்லியில் இருந்து காத்மண்ட் உள்ளிட்ட நேபாளத்தின் பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், லஜ்பத் நகர், மஜ்னு கா திலா மற்றும் காஷ்மீர் கேட்டில் இருந்து சென்ற பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.