சொத்து வரி பற்றாக்குறையை ஈடுகட்ட புதிய டிஜிட்டல் வழிமுறைகளை கையாளும் சென்னை மாநகராட்சி
சென்னை: சொத்து வரி பற்றாக்குறையை ஈடுகட்ட சென்னை மாநகராட்சி புதிய டிஜிட்டல் வழிமுறைகளை கையாண்டு வருகிறது. நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.190 கோடி சொத்து வரி பற்றாக்குறையை ஈடுகட்ட, சென்னை மாநகராட்சி புதிய டிஜிட்டல் வழிமுறைகளை கையாண்டு வருகிறது. முதல் ஆறு மாதங்களில் ரூ.1,100 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.910 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதனால் ரூ.190 கோடி குறைவாக வசூலாகியுள்ளது. இந்த பற்றாக்குறையை சரிகட்ட மாநகராட்சி புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வரி செலுத்துவோருக்கு வாட்ஸ்அப் மூலம் நினைவூட்டல் செய்திகள் அனுப்பப்படுகின்றன. அந்த செய்தியில் க்யூஆர் குறியீடும் இருக்கும். அதை ஸ்கேன் செய்து மக்கள் வீட்டிலிருந்தே எளிதாக வரி செலுத்த முடியும். இனி மாநகராட்சி அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. தற்போதைய மற்றும் கடந்த ஆறு மாதங்களுக்கான வரி செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் வருவாய் ஊழியர்கள் நேரடியாக அவர்களை தொடர்பு கொண்டு வரி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
முந்தைய ஆண்டுகளில் பல இடங்களில் வசூல் முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால் இப்போது அவை நடத்தப்படமாட்டாது. காரணம், பெரும்பாலான மக்கள் இப்போது ஆன்லைனில் வரி செலுத்துவதையே விரும்புகின்றனர். எனவே முழுக்க முழுக்க டிஜிட்டல் முறைக்கு மாநகராட்சி மாறிவிட்டது.
பெரிய வணிக வளாகங்களில் பொதுவான க்யூஆர் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன. இதனால் அவர்கள் எளிதாக தங்கள் வரியை செலுத்த முடியும். தொழில் வரியாக ரூ.143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பழைய முறைகளை விட்டு விட்டு, நவீன டிஜிட்டல் முறைக்கு மாநகராட்சி மாறி வருகிறது. கடந்த நிதியாண்டில் சொத்து வரி வசூலில் ரூ.2,000 கோடியை தாண்டிய சாதனையை மாநகராட்சி செய்தது. இந்த புதிய முறைகள் மூலம் நிதியாண்டு இலக்கை அடைய மாநகராட்சி முயற்சி செய்து வருகிறது.