பிரிவினை வளர்ப்பதா?
பீகார் மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, ‘‘தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’’ என பிரதமர் மோடி பேசி இருக்கும் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரைப்போலவே அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர். ‘‘தி.மு.க வேறு, தமிழர்கள் வேறு அல்ல. இது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். பிரதமர் மோடி அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும்’’
என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடையே மொழி, இனம், மதம் அடிப்படையிலான பிரிவினையை பேசி தேர்தல் ஆதாயம் அடைவது என்பது பாஜவிற்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மீது பிரதமர் மோடி சாடினார். அவர் மட்டுமின்றி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்த அந்த ஐஏஎஸ் அதிகாரியை குறி வைத்து விமர்சனம் செய்தனர்.
பீகாருக்கு சென்றால் - பீகார் மக்களை பற்றி பேசாமல், தமிழர்களை பற்றி பேசுவது, ஒடிசாவுக்கு சென்றால் - அம்மாநில மக்களை பற்றி பேசாமல் தமிழர்களை பற்றி விமர்சனம் செய்வது என எங்கு சென்றாலும் தமிழர்களை வசைபாடுவது பிரதமருக்கு வாடிக்கையாகி விட்டது. இதன்மூலம், பாஜவினர், உண்மையிலேயே தமிழ், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். பிரதமர் மட்டுமின்றி, பா.ஜ. தலைவர்கள் ஒவ்வொருவரும், வடமாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தலின்போது, தங்களது தேர்தல் ஆதாயத்துக்காக தமிழர்களின் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
வெறும் வாக்கு வங்கிக்காக வாயில் வந்ததை பேசி, தமிழ்மக்களின் வலையில் சிக்கி, வதைபடக்கூடாது. தலைமை பொறுப்பில் இருப்பவர், தான் சொல்கிற ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, 22 மொழிகள் பேசும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் இந்த இந்திய தேசம், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது. இப்படிப்பட்ட அமைதியான சூழல் நிலவும்போது, ஜாதி ரீதியாக, மத ரீதியாக, இனம் ரீதியாக மக்களிடையே பிரிவினையை வளர்ப்பது, தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் இடையே பகையை உண்டாக்குவது என பா.ஜ கீழ்த்தரமான அரசியல் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த அற்ப அரசியலை நிறுத்திவிட்டு, நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்துவதே நல்லது.
தலைவன் என்பவர், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். பொறுப்புடன் செயல்பட வேண்டும். தன்னம்பிக்கை தரும் பேச்சை வெளிப்படுத்த வேண்டும். மாறாக, தேர்தல் ஆதாயத்திற்காக ஒற்றுமையாய் வாழும் மக்களிடையே சண்டையை உருவாக்கும் அபத்தமான செயலில் இறங்க கூடாது. ஒரு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், மலிவான அரசியல் செய்து, மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. தலைவன் என்றும் தன்நிலை மறக்கக்கூடாது, தடுமாறக்கூடாது.