புரோ கபடி தொடர் தபாங் டெல்லி சாம்பியன்
புதுடெல்லி: புரோ கபடி லீக் போட்டிகள், கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கின. இதில், 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப் பட்டியலில் 2ம் இடம் பிடித்த தபாங் டெல்லி அணி, முதலாவது தகுதி சுற்றில் புனேரி பல்தானை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த புனேரி பல்தான் அணி, 2வது தகுதிச் சுற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில், தபாங் டெல்லி - புனேரி பல்தான் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
போட்டியின் துவக்கத்தில் தபாங் டெல்லியின் ஆதிக்கம் இருந்ததால், முதல் பாதி ஆட்ட முடிவில் அந்த அணி 20-14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதி ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி கடுமையாக முயற்சித்தபோதும், தபாங் டெல்லி அணி, 31-28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடியது. சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ 3 கோடியும், தோல்வியை தழுவி 2ம் இடம் பிடித்த புனேரி பல்தான் அணிக்கு ரூ. 1.8 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.