ஆக்கிரமிப்பு, நெரிசல், அசுத்தம் பிரச்னைகளுக்கு தீர்வாக புராஜெக்ட் திருவான்மியூர் மாட வீதி: பழைய பொலிவை மீட்டெடுக்க அப்பகுதி மக்கள் புதிய முயற்சி
சென்னை: திருவான்மியூர் மாட வீதியை சீரமைக்க அப்பகுதி மக்கள், வியாபாரிகள், மற்றும் சில சுற்றுலா பயணிகள் இணைந்து ‘புராஜெக்ட் திருவான்மியூர் மாட வீதி’ என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். 1990களில் திருவான்மியூர் மாட வீதியில் நிறைய தமிழ் திரப்படங்கள் படமாக்கப்பட்டது. அவற்றில் அப்போதைய மருதீஸ்வரர் கோயில் கோபுரம் கட்டும் பணி, அகலமான நடைபாதைகள், கோயில் குளத்தைச் சுற்றியுள்ள திறந்தவெளி சாலைகள் என அழகாக காட்டப்பட்டிருக்கும்.
ஆனால், இப்போது அந்த பகுதி முற்றிலும் மாறிவிட்டது. இப்போதெல்லாம், மாட வீதிகள் நெரிசலாகவும், நடைபாதைகள் இல்லாமலும், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டும், குப்பை நிறைந்தும் காணப்படுகின்றன. இதனால், மருதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளில் நடப்பதே சிரமமாக உள்ளது. ஆனால், இந்த நிலை விரைவில் மாறக்கூடும்.
இந்த பகுதியின் சீரழிவை சரிசெய்யவும், எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும், அப்பகுதி மக்கள், வியாபாரிகள் மற்றும் சில சுற்றுலா பயணிகள் இணைந்து ‘புராஜெக்ட் திருவான்மியூர் மாட வீதி’ என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில், கிழக்கு மாட வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் நடைபெறுகிறது. இந்த மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியில், புகைப்பட கண்காட்சி, நேரடி ஓவியம் வரையும் அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
இதன் மூலம், இந்த பகுதியின் பொது இடங்களை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த மக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் வாழ்பவர்கள், கடைக்காரர்கள், தினமும் வந்து செல்பவர்கள், கோயில் பக்தர்கள், வியாபாரிகள் என இந்த பொது இடங்களை நம்பி இருப்பவர்களிடம் இருந்து நேரடியாக பிரச்சனைகளை கேட்டறிவதே இதன் முக்கிய நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘1980களின் பிற்பகுதியில், மக்கள் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் விளையாடுவார்கள். அது ஒரு திறந்தவெளியாகவும், மணல் நிறைந்த இடமாகவும் இருந்தது. இப்போது அந்த இடம் நடப்பதற்கே சிரமமாக இருக்கிறது. மாட வீதிகளில் உள்ள பல இருண்ட மூலைகளை பலர் மது அருந்தவும், சிறுநீர் கழிக்கவும், குப்பையை போடும் இடமாகவும் மாற்றிவிட்டனர். இதை மாற்ற, பொதுமக்களை ஈடுபடுத்தி, என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ள விரும்பினோம்.
இந்த நிகழ்ச்சி, மக்கள் தங்கள் தேவைகளை சென்னை மாநகராட்சி மற்றும் பிற அதிகாரிகளிடம் தெரிவிக்க உதவும்.இந்த கலந்துரையாடல்களில் இருந்து பெறப்படும் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, எந்தவொரு மறுவடிவமைப்பும் சமூகத்தின் குரல்களையும், மக்களின் அனுபவங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உறுதி செய்யப்படும்,’ என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் கணபதி கூறுகையில், ‘இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், இந்த பகுதி மாறக்கூடும். வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தி, நடைபாதையையும் அமைக்கலாம்,’ என்றார். இந்த நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சம், நீண்டகால குடியிருப்பாளர்கள் வழங்கிய பழைய புகைப்படங்கள், தனிப்பட்ட கதைகள் மற்றும் அப்பகுதி நினைவுகளின் தொகுப்பு ஆகும். வரலாற்றோடு மக்களை மீண்டும் இணைப்பதன் மூலம், ஒரு புதிய சொந்த உணர்வையும், கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்க்க முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.