பேராசிரியை நிகிதா நகை திருட்டு புகார் கோயில் ஊழியர்கள் 35 பேரிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கையும் சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மடப்புரத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், நிகிதாவின் நகைகள் திருட்டு புகார் தொடர்பாக கோயில் ஊழியர்கள் சக்தீஸ்வரன், ராஜா மற்றும் அஜித்குமாரின் நண்பர்கள் உள்பட 5 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 2வது நாளாக நேற்று காலை 11.30 மணிக்கு விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மடப்புரம் வந்தனர்.
இக்குழுவினர் கோயில் உதவி ஆணையர் அலுவலகம் சென்று நிரந்தர மற்றும் தற்காலிக, அவுட்சோர்சிங் பணியாளர்கள் உட்பட 35 பேரின் பெயர் பட்டியலை வாங்கினர். பின்னர் மடப்புரம் பஸ் நிலையம் சென்று, அங்கு ஆட்டோ சங்கத்தின் சார்பில் வைத்துள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்து அதனுடைய புட்டேஜை பார்க்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு ஆட்டோ சங்கத்தினர் இந்த சிசிடிவி 12 நாட்கள் வரை மட்டுமே பதிவு இருக்கும். பின்னர் தானாகவே அழிந்துவிடும் என்றனர். அதனை தொடர்ந்து கோயில் ஊழியர்கள் 35 பேரையும் வரவழைத்து சிபிஐ போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.