பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு
திருப்புவனம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் பேராசிரியை நிகிதா. இவர், ஜூன் 27ம் தேதி, தனது தாயுடன் சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது காரில் இருந்த நகைகள் மாயமானதாக திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கோயில் காவலாளி அஜித்குமாரிடம் விசாரித்த போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 போலீசார் கைதாயினர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். மேலும், நகை மாயமான வழக்கின் விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடிப்பதாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை, சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் நகை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் ஒப்படைத்தனர்.