பேராசிரியை நகை திருட்டு புகார் கோயில் ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார்(28), நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு புகார் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வரும் 24ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வருகிறது. நேற்று மடப்புரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் சென்று நிகிதாவின் புகார் தொடர்பாக கோயில் ஊழியர்கள் சக்தீஸ்வரன், ராஜா மற்றும் அஜித்குமாரின் நண்பர்களான ஆட்டோ டிரைவர் அருண்குமார், வினோத்குமார், பழக்கடை வியாபாரி ஈஸ்வரன் ஆகியோரை அழைத்து வந்து காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விசாரித்தனர். கோயில் நிர்வாக அலுவலகத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை பணியில் இருக்கும் ஊழியர்கள் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.