மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னையில் 4 இடங்களில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு: சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை எடுத்த முன்ெனச்சரிக்கை நடவடிக்கையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 4 இடங்களில் 2,005 சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டது. சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27 ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னையை பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லையில் 1,362 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் வைக்கப்பட்ட 408 சிலைகள், ஆவடி மாநகர காவல் எல்லையில் 235 சிலைகள் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. 4 நாட்கள் வழிபாடு முடிந்து 5வது நாளான நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டது.
வழக்கம் போல் விநாயகர் சிலைகளை கரைக்க பெருநகர காவல்துறை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம், நீலாங்கரையில் உள்ள பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர பகுதியில் உள்ள பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்களில் பெருநகர காவல் துறை அனுமதி வழங்கியது.அதன்படி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய சிவசேனா என இந்து அமைப்புகள் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,519 சிலைகளை அனுமதிக்கப்ட்ட வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 4 வழித்தடங்கள், ஆவடி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 5 வழித்தடங்கள் மூலம் பொது மக்கள் வழிபாட்டுன் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்து அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் அமைக்கப்பட்ட ராட்சத கிரேன் உதவியுடன் அனைத்து சிலைகளும் நீச்சல் தெரிந்த மீனவர்கள், தன்னார்வளர்கள் உதவியுடன் கரைக்கப்பட்டது.
வழக்கமாக ஜாம் பஜார் பகுதியில் உள்ள மசூதி வழியாக கடந்த 1997ம் ஆண்டு முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனால் இந்து முன்னணியினர் அப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயல்வது வழக்கம். இதனால் இந்த ஆண்டும் அப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் மொத்தம் 16,500 போலீசார் மற்றும் 1500 ஆயிரம் ஊர்காவல் படையினர் என மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணி ேமற்கொண்டனர். உயர் அதிகாரிகள் திட்டமிட்டு விநாயகா சிலை ஊர்வல பாதைகளில் டிரோன் மூலம் கண்காணித்தனர். அதேபோல் சிசிடிவி கேமரா மூலம் பிரச்னைக்குரிய இடங்களை போலீசார் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடியே கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், சிலைகள் கரைக்கும் 4 இடங்களிலும் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி நேற்று நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக நேற்று இரவு 9 மணி நிலவரப்படி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் 1,164 சிலைகள், நீலாங்கரையில் உள்ள பல்கலை நகர் கடற்கரையில் 611 சிலைகள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் 216 சிலைகள், திருவொற்றியூர பகுதியில் உள்ள பாப்புலர் எடைமேடை பகுதியில் உள்ள கடற்கரையில் 14 சிலைகள் என மொத்தம் 2,005 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. திட்டமிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக முடிந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து போலீசாருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.