2024 டிசம்பருக்கு முன்பு வந்த பாக்., ஆப்கன், வங்கதேச நாட்டு சிறுபான்மையினருக்கு சலுகை: பாஸ்போர்ட் இல்லாமல் தங்க ஒன்றிய அரசு அனுமதி
புதுடெல்லி: இந்தியாவுக்கு 2024 டிசம்பருக்கு முன்பு வந்த பாக்., ஆப்கன், வங்க தேச நாட்டு சிறுபான்மையின மக்கள் பாஸ்போர்ட் இல்லாமல் தங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டினர் இந்தியாவில் தங்குவது குறித்து குடியேற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு: 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்பு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாட்டில் இருந்து இந்தியா வந்த இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர், ஜெயின் மற்றும் பார்சி ஆகியோர் செப்.1 முதல் அமலுக்கு வந்த குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இன் கீழ் தண்டனை நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் 1959 முதல் 2003 மே 30 வரை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய சிறப்பு நுழைவு அனுமதியின் பேரில் இந்தியாவிற்குள் நுழைந்து, சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் பதிவு அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்ட திபெத்தியர்களுக்கும் இதே போன்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள், சீனா, மக்காவ், ஹாங்காங் அல்லது பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தாலோ அல்லது வெளியேறினாலோ, விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு விலக்கு
2015 ஜனவரி 9 வரை இந்தியாவில் தஞ்சம் புகுந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குப் பொருந்தாது. மேலும் தண்டனை நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் உறுப்பினர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பணியில் இந்தியாவிற்குள் நுழைந்தாலோ அல்லது வெளியேறினாலோ ராஜதந்திர பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு விசா தேவையில்லை.
5 ஆண்டு சிறை
இந்த ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 21ன் படி செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது விசா உள்ளிட்ட பிற பயண ஆவணம் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்தால், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பிரிவு 23, வெளிநாட்டினரைத் தொடர்ந்து தங்கியிருந்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை , ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் எந்தவொரு வெளிநாட்டவரும் சட்டவிரோதமாக நுழைந்தால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- வெளிநாட்டினர் விசா காலத்தை மீறி 30 நாட்கள் வரை தங்கியிருந்தால் ரூ.10,000 செலுத்த வேண்டும். 31-90 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் ரூ.20,000 விதிக்கப்படும்.
- 91-180 நாட்கள் காலம் தாண்டி தங்கியிருந்தால் ரூ.50,000, 181 நாட்களில் இருந்து ஒரு வருடத்திற்கு மேல் தங்கியிருந்தால் ரூ.1 லட்சம். கூடுதலாக தங்கியிருக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.2 லட்சம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.3 லட்சம் விதிக்கப்படும்.
- ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்றால் அபராதங்களை செலுத்த வேண்டும்.
- வெளிநாட்டினரின் தங்குமிட விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளால் வெளிநாட்டு மாணவர்கள்/நோயாளிகள் குறித்த தகவல் வெளியிடப்படாவிட்டால் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.