தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை துறைமுகம் உள்பட 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) பயிற்சி அளித்தனர். சென்னை துறைமுகம், நியூ மங்களூர் துறைமுகம், காமராஜர் துறைமுகம், எண்ணூர், காமராஜர் துறைமுகம்,தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆகிய 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த காவலாளிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், துறைமுகங்களில் உள்ள முக்கிய நிலையங்கள், அவற்றுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு சவால்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40 காவலாளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் பேசுகையில், ‘‘துறைமுகங்களின் பாதுகாப்பு மேலாண்மையின் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்களை சேர்ந்த காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்றார். சிஐஎஸ்எப்பின் ஐஜி சரவணன்,‘‘ துறைமுகங்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தனியார் காவலாளிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது ’’ என்றார்.