இணையத்தில் அந்தரங்க வீடியோ வெளியாவது கவலை அளிக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை: இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது மேலும் 13 இணையதளங்களில் பரவி உள்ளது. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள ஆயிரத்து 400 சட்ட விரோத இணையதளங்களை முடக்கியது போல, இந்த சட்ட விரோத இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வகுத்து வருவதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து நீதிபதி, ராமாயணத்தில் ராவணின் தலை ஒவ்வொரு முறை வெட்டப்படும் போது மீண்டும் மீண்டும் முளைப்பது போல, மீண்டும் மீண்டும் அந்தரங்க வீடியோக்களும் இணையத்தில் வெளியாகிறது கவலை அளிக்கிறது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சட்ட விரோத இணைய தளங்களை முடக்கியது போல, இந்த இணைய தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அப்போது, ஒன்றிய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.