தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறும் முடிவுக்கு கம்யூனிஸ்ட் வரவேற்பு
சென்னை: தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம் திரும்பப் பெறுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்: அண்மையில் நடந்த சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதையும், அடித்தட்டு உழைக்கும் மக்களின் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் என்பதை அரசின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டது.
கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்த நிலையில், அதன் நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற்று, மறுபரிசீலனை செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சட்ட மசோதாவை திரும்பப் பெறும் அரசின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. அதே சமயம், திரும்பப் பெறப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பான மறுபரிசீலனை என்பது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கொள்கையை உறுதி செய்து, மேலும் விரிவாக்கி, வலிமைப்படுத்தும் திசைவழியில் அமைந்து, உயர்கல்வி பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வரும் வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன்: தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் விரும்பினால் அவற்றைத் தனியார்ப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள இந்த சட்டத் திருத்தம் வழி வகுக்கிறது. உயர்கல்வி தனியார்மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும்; கல்விக் கட்டணம் அதிகரிக்கும்; அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேர பாதிக்கப்படுவார்கள். எனவே, மாணவர்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என கூறியுள்ளார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை: இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களா மாற்ற அனுமதித்தால், அவை மிகப் பெரும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வழிவகுக்கும். பல்கலைக்கழகமாக மாறியவுடன் அரசின் மான்யம் நின்று போகும். தனியார் வசம் உயர் கல்வி சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது. எனவே மசோதாவை முற்றிலுமாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.