சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு : 2 தனியார் மருத்துவமனைகளின் குற்றம் உறுதி!!
நாமக்கல்: தமிழ்நாட்டில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய முறைகேடான சிறுநீரக அறுவை சிகிச்சை புகாரில் திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நிறுவனங்கள் குற்றச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை மீதும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீதும் புகார்கள் குவிந்தன.
இந்த புகார் தொடர்பாக மருத்துவ திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை குழு திருச்சி வட்டாரப்பகுதியில் இருந்து சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள், கோப்புகளை ஆய்வு செய்தது. அவற்றுள் சட்டத்திற்கு முரணாக சான்றுகள் பெறப்பட்டுள்ளதும் இந்த இரண்டு மருத்துவமனைகள் தவறான முறையில் தாக்கல் செய்ததும் உறுதிசெய்யப்பட்டது.
அத்துடன் நெருங்கிய உறவினர் அல்லாத உயிருள்ள கொடையாளரிடம் பணத்திற்காக தரகர் மூலம் உறுப்புகள் பெறப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தி, மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிதார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைகளில் இருந்து அரசு அங்கீகாரக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள் முறைகேடாக சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் மூலம் ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைப்படி இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆனந்தன், ஸ்டான்லி மோகன் என்ற தரகர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்கள், தொலைபேசி பதிவுகள் அடிப்படையில் வழக்கு பதியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையே பணத்திற்காகவோ வேறு பலனுக்காகவோ உறுப்பு மாற்று வழங்கினால் சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படும் என்று அனைத்து மருத்துவமனைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது உள்ள மாவட்ட அளவிலான நான்கு குழுக்களை மறுசீரமைப்பு செய்யப் பரிந்துரைக்கப்பட்டது. உடல் உறுப்பு ஏற்பாளர்,அங்கீகாரக்குழுவுக்கு முன்பு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் இயலாத பட்சத்தில் காணொளி வாயிலாக கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.