சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு புதுச்சேரி கூட்டணி அரசுக்கு பாஜ எம்எல்ஏ திடீர் கெடு: ‘பட்டியலினத்தவருக்கு அமைச்சர் பதவி 15 நாளில் வழங்க வேண்டும்’
புதுச்சேரி: புதுச்சேரி அரசை கண்டித்து ஆளும் கட்சி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான (பாஜ) சாய். ஜெ. சரவணன்குமார் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல் பரவியது. இதற்கிடையே நேற்று காலை சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து, மையமண்டபத்தின் நுழைவாயிலில் நிருபர்களை சந்தித்து பேசுகையில், பல்வேறு கோரிக்கைகளை மக்களுக்கு செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டு, பெஸ்ட் புதுச்சேரி எனக்கூறிய மோடியின் இரண்டு கண்களையும் கைகளால் குத்துகிறார்கள். 16 பேர் கொண்ட ஆளும் கட்சியின் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு இடம் அளிக்கவில்லை.
ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களை கூறி அவரை நீக்கியது ஏன்? மேலும் ஒரு அமைச்சர் மீது தன்னை தொந்தரவு செய்வதாக புகார் அளித்தார், அதன் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பாஜ ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெறும் என கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எந்த திட்டமும் செய்யப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் உரிமைகள் அனைத்தும் பறிபோய் உள்ளது. பட்டியிலனத்தை சேர்ந்த 4 எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும். 15 நாட்களுக்குள் நிறைவேற்றித்தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவேன், என்றார்.