30 நாள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு அரசியலமைப்பு திருத்த மசோதா ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்: மாயாவதி கருத்து
லக்னோ: குற்ற வழக்கில் சிறையில் இருந்தால் பதவி பறிக்கும் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் இதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:பெரும் கூச்சலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா, நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒன்றாகத் தெரிகிறது.
ஆளும் கட்சிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த லாபத்திற்காகவும், சுயநலத்திற்காகவும், விரோதத்திற்காகவும் இதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, எங்கள் கட்சி இந்த மசோதாவுடன் உடன்படவில்லை. நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் நலனுக்காக அரசாங்கம் இதை மறுபரிசீலனை செய்வது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.