பிரதமர் மோடியுடன் இன்று சுபான்ஷூ சுக்லா சந்திப்பு
புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய பின்னர் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். நாசா மற்றும் இஸ்ரோ ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி வீரரும் விமானப்படை கேப்டனுமான சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஜூன் மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டனர். சுபான்ஷூ குழுவினர் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.
பின்னர் ஜூலை 15ம் தேதி விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு திரும்பியது. இதனை தொடர்ந்து சுபான்ஷூ சுக்லா இன்று தனது சொந்த ஊரான லக்னோ திரும்புகிறார். பின்னர் சுபான்ஷூ சுக்லா பிரதமர் மோடியை சந்திக்கிறார். 2027ம் ஆண்டு இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளி பயணத்தை எதிர்நோக்கியுள்ளதால் சக ஊழியர்களுடன் சுக்லா பகிர்ந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். சுக்லா, விமானத்தில் அமர்ந்திருக்கும் தனது புன்னகை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்தியாவிற்கு திரும்புவதற்கு ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.