பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ரூ.34.13 கோடி வருவாய்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்
புதுடெல்லி: பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.34.13 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மனதின் குரல் நிகழ்ச்சி பல பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பார்வையாளர்களைச் சென்றடைகிறது. இந்த நிகழ்ச்சிக்காக தனியாக கூடுதல் செலவு இல்லாமல், ஏற்கனவே உள்ள உள் வளங்களைப் பயன்படுத்தி அகில இந்திய வானொலியால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ரூ.34.13 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடியின் பேச்சை பலர் கேட்கிறார்கள். அதன் தேசிய மற்றும் பிராந்திய நெட்வொர்க்கில் நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது. பிராந்திய மொழி பதிப்புகள் உள்ளூர் மக்களைச் சென்றடைய ஒலிபரப்பப்படுகின்றன.இவ்வாறு தெரிவித்தார்.