பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் பேசுவதா?: நடிகர் விஜய்க்கு பாஜக செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்
சென்னை: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் பேசுவதா? என்று நடிகர் விஜய்க்கு பாஜக செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்ட அறிக்கை: நடிகர் விஜய் அதிகார அரசியலுக்காக, சினிமா விளம்பர பாதையில், முதல்வர் நாற்காலி போதையில், முழு நேர அரசியல் நடிகராக செயல்பட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது. விக்கிரவாண்டியை தொடர்ந்து, மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிலும் நடிகர் விஜயின் வீர வசனங்கள் அடங்கிய உரை ஒரு அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போலவே இருந்தது.
மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள், அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அந்த அடிப்படையில் நடிகர் விஜயை பாஜக வரவேற்றது. பாஜக தலைவர்களும் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் பேசியுள்ளார். அரசியலுக்கு புதிதாக வந்தவர் விரைவில் புரிந்து செயல்படுவார் என்று பொறுமை காத்தனர். ஆனால் மதுரை மாநாட்டு பேச்சின் மூலம் தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டின் சைமனின் மறு உருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்கி வருகிறார் என்பது மட்டும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பிரதமர் மோடியை ”மிஸ்டர் பி.எம்” என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை ”அங்கிள்” என்றும் வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். நடிகர் விஜய் சிறுவயதில் நடிகராக வேண்டும் என்று அவரின் பெற்றோர் ஆசைப்பட்டனர். நல்ல நடிகராக வெற்றி பெற்று விட்டார். ஆனால் இன்னும் நீங்கள் நல்ல மக்கள் அரசியல்வாதியாக மாறவில்லை உணர்ந்து கொள்ளுங்கள். இனியாவது வருகின்ற காலங்களில் விளம்பர அரசியலுக்காக, உலக அரசியலுக்கே வழிகாட்டியாக விளங்கும் பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் விமர்சிப்பதை விட்டு, தமிழக வெற்றி கழகத்தையும், அதை நம்பி வந்த லட்சக்கணக்கான இளைஞர்களையும் நல்வழிப் பாதையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.