விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நாளை கோவை வருகை: பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
கோவை: விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க கோவைக்கு நாளை பிரதமர் மோடி வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் இயற்கை விவசாயிகள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர். இதில், பங்கேற்க பிரதமர் மோடி நாளை மதியம் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
மதியம் 1.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார். பின்னர், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், கோவையில் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 40 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.