பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி போராட்டம்; வங்கதேசத்தில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: 14 போலீசார் உள்பட 91 பேர் பரிதாப பலி
ஷேக் ஹசீனாவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் கூடிய மாணவர்கள், “ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். 2ம் நாளாக நேற்றும் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு எதிராக ஆளும் கட்சி ஆதரவாளர்களும் போராட்த்தில் குதித்துள்ளனர். இதனால் பல இடங்களில் மாணவர்களுக்கும், அவாமி லீக் கட்சி ஆதரவாளர்ளக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்கினர். பதிலுக்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் டாக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் பொதுசொத்துகள் சேதமடைந்தன. நேற்று நடந்த போராட்டத்தில் 14 காவலர்கள் உள்பட 91 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த போராட்டத்தால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.