பிரதமர் மோடி-இங்கி. பிரதமர் மும்பையில் நாளை சந்திப்பு
புதுடெல்லி: இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பையில் பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார். கடந்த ஆண்டு ஜூலையில் இங்கிலாந்து பிரதமரமாக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக இன்று வருகிறார். இதே போல, பிரதமர் மோடியும் 2 நாள் பயணமாக மும்பைக்கு இன்று செல்கிறார்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நவி மும்பைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புதிதாக கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, ரூ.37,270 கோடி செலவில் கட்டப்பட்ட மும்பை மெட்ரோ பாதை-3 இன் இறுதிக் கட்டத்தை திறந்து வைப்பார். இத்துடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, 11 பொது போக்குவரத்து நிறுவனங்களை இணைக்கும் வகையில் ‘மும்பை ஒன்’ ஒருங்கிணைந்த செயலியை அறிமுகம் செய்கிறார்.
பயணத்தின் 2ம் நாளான நாளை இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இரு தலைவர்களும் தொழிலதிபர்களை சந்தித்து இந்தியா, இங்கிலாந்து இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் வழங்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து விவரிக்க உள்ளனர். மேலும், இரு தலைவர்களும் ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும் 6வது உலகளாவிய பின்டெக் விழாவிலும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.