பிரதமர் மோடி அழைப்பு வந்தே மாதரம் 150ம் ஆண்டு விழாவை கொண்டாடுவோம்
புதுடெல்லி: பிரதமர் மோடி தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: நாடு முழுவதிலும் இப்போது பண்டிகைக்காலக் குதூகலம் நிரம்பி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினோம். அடுத்ததாக சத் பூஜையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நாட்டுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு சத் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது, எல்லை காவல்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தங்களுடைய அணிகளில் இந்திய இனங்களைச் சேர்ந்த நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றார்கள். நமது நாட்டு ரக நாய்கள் அற்புதமான சாகசங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. கர்நாடகாவின் சிக்கமகளூரு, கூர்கா, ஹாசான், தமிழ்நாட்டின் பழனி, சேர்வராயன், நீலகிரி, ஆனைமலை, கர்நாடகா-தமிழ்நாட்டின் எல்லையான பிலிகிரி, கேரளாவின் வயநாடு, திருவாங்கூர், மலபார் பகுதிகள் என இந்தியாவில் கணிசமான அளவு காபியின் பன்முகத்தன்மை இருக்கிறது.
தற்போது இந்தியாவின் காபி தான் மிகச்சிறந்த காபி என உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. இதில் ஒடிசாவின் கோராபுட் காபியின் சுவையும் அலாதியானது. வரும் நவம்பர் 7ம் தேதி நாம் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு உற்சவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டு, 1896ம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக பாடினார். நாம் வந்தேமாதரத்தின் 150வது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும்.
வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை முன்னெடுத்துச் செல்லவேண்டும். ஒருகாலத்தில் வழக்கு மொழியாக இருந்த சமஸ்கிருதம், நாடு அடிமைப்படுத்தப்பட்ட கால கட்டத்திலும், சுதந்திரத்திற்கு பிறகும் புறக்கணிப்புக்குள்ளானது. இப்போது காலம் மாறி வருகிறது. பலர் தங்களுடைய சமூக ஊடக சேனல் வாயிலாக, சம்ஸ்கிருதத்தைக் கற்பித்தும் வருகிறார்கள்.
மொழி என்பது எந்த ஒரு நாகரீகத்தின் விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இந்தக் கடமையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சம்ஸ்கிருதம் ஆற்றியிருக்கிறது. இப்போது சம்ஸ்கிருதம் தொடர்பாக சில இளைஞர்கள் தங்களுடைய கடமையை ஆற்றி வருவது மிகவும் இனிமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
* ஆசியான் மாநாட்டில் உரையாற்றினார்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடான ஆசியான் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆற்றிய உரையில், ‘‘இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையே நீடித்த, ஆழமான கூட்டாண்மை உள்ளது.
இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படும் கொள்கையின் முக்கிய தூணாக ஆசியான் உள்ளது. பேரிடர் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஆசியான் சகாக்களுடன் இந்தியா தொடர்ந்து தீவிரமாக பங்காற்றி வருகிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் 2026ம் ஆண்டை இந்தியா-ஆசியான் கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக அறிவிக்கிறேன்’’ என்றார்.