பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிப்பு
டோக்கியோ: பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து நேற்று ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் இருந்து ஜப்பான் சென்ற துறவியான போதி தர்மரின் மரபை அடிப்படையாக கொண்ட தருமா பாரம்பரியம் ஜப்பானில் புகழ்பெற்று விளங்குகிறது. ஜப்பானில் போதி தர்மர், தருமா டைஷி என அழைக்கப்படும் நிலையில், அவரது மாதிரியாக வடிவமைக்கப்படும் தருமா பொம்மைகள் மங்களகரமான மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் புனித பொருளாக அங்கு பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த தருமா பொம்மையை டோக்கியோவில் உள்ள ஷோரிங்ஜன் தருமா-ஜி கோயில் தலைமை குரு, மோடிக்கு பரிசாக வழங்கினார்.