மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை : அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி பதிலடி
புதுடெல்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி விவகாரத்தையடுத்து விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதாலே உக்ரைன் போர் நடப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி விதித்துள்ளார். முதலில் 25% வரி விதித்த நிலையில், தற்போது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம் வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இந்த வரி தொடர்பாக மற்றொரு காரணம் இருப்பதாகவும் டிரம்ப் சொல்கிறார். அதாவது இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில், விவசாய இறக்குமதிக்கு அனுமதி அளிக்க அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுக்கிறது.
அதற்கு இந்தியா உடன்படவில்லை. இந்த 50% வரி விதிக்க அதுவும் கூட முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். டெல்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், "இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிப்போம். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தாலும், அதற்கு தயாராக இருக்கிறேன். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ’ என்றார்.