சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது: பிரதமர் மோடி பேச்சு
கோவை: சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுகிறார்கள் என தெரிவித்தார். மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர்,
சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது: பிரதமர் மோடி
சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
பீகாரின் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ! - பிரதமர்
நான் வரும் வழியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் துண்டை சுழற்றி வீசியதை பார்த்தேன். பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ என்று என் மனம் நினைத்தது. மருதமலை முருகனை முதன்மையாக தலை வணங்குகிறேன். கோவை எம்.பி.யாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணை தலைவராக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார்.
தமிழ்நாட்டின் சக்தி பீடம் கோவை - பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சக்தி பீடமாக கோவை விளங்குகிறது.
இயற்கை வேளாண்மை - சர்வதேச மையமாகும் இந்தியா
இயற்கை வேளாண்மையின் சர்வதேச மையமாக உருவெடுக்கும் பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வேளாண்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமானதாக பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
வேளாண் உற்பத்தி இரட்டிப்பாகி உள்ளது
கடந்த 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி இரட்டிப்பாகி உள்ளது. விவசாயத்தை நவீனப்படுத்த தேவையான அனைத்து வழிகளையும் அரசு திறந்துவிட்டுள்ளது.
கிஷான் கிரெடிட் கார்டு - ரூ.10 லட்சம் கோடி நிதி
கிஷான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நிதி வழங்கியிருக்கிறோம். இதுவரை பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மாணவிகளின் பதாகையை சுட்டிக்காட்டி மோடி பேச்சு
பள்ளி மாணவிகள் உயர்த்திப்பிடித்த பதாகையை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி பேச்சு. பட்டம் பெறும்போது இந்தியா பொருளாதாரத்தில் 2வது இடத்தில் உள்ளது; ஓய்வுபெறும்போது முதலிடத்தில் இருக்கும் என பதாகை. மாணவிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகையை மேடைக்கு வாங்கி வரும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
ரசாயன உரங்களால் மண் வளம் அழிகிறது
ரசாயன உரங்களால் நமது மண்ணின் வளம் அழிந்து கொண்டே செல்கிறது. ரசாயன உரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாற்றுப் பயிர், இயற்கை விவசாயம் அவசியம். ரசாயன உரங்களின் பயன்பாட்டால் விவசாயத்தின் செலவீனமும் அதிகரித்து வருகிறது.
இயற்கை வேளாண்மையில் முன்னேறுவது அவசியம்
இயற்கை வேளாண்மை துறையில் இந்தியா முன்னேறியே ஆக வேண்டும். பருவநிலையில் ஏற்படும் மாற்றத்தை எதிர்கொள்ள இயற்கை விவசாயம் பேருதவியாக இருக்கிறது.மண்ணின் நலத்தை ஆரோக்கியமாக வைக்க இயற்கை வேளாண்மை உதவியாக உள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பாஜக அரசு முனைப்பு
இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதில் பாஜக அரசு முனைப்பாக உள்ளது. இயற்கை விவசாயத்துக்காகவே தேசிய அளவில் ஓராண்டுக்கு முன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
35,000 ஹெக்டேர் பரப்பில் இயற்கை வேளாண்மை
தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. இயற்கை வேளாண்மை என்பது இந்தியாவுக்கு சொந்தமான சுதேசி கருத்து. இயற்கை வேளாண்மையை நாம் யாரிடம் இருந்தும் இறக்குமதி செய்யவில்லை.
முருகனுக்கு தேனும் தினை மாவும் படைக்கின்றோம்
முருகப்பெருமானுக்கு தேனும் தினைமாவையும் நிவேதனப் பொருட்களாக படைக்கிறோம். தமிழ்நாட்டில் கம்பு, சாமை போன்றவை பல தலைமுறைகளாக நமது உணவில் ஒன்று கலந்தவை. தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் பட்டியலில் சிறு தானியங்கள் உள்ளன.
விவசாயத்தில் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா
தென்னிந்தியா விவசாயத்தில் வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. கேரளாவின் மலைப் பகுதிகளில் பல அடுக்கு விவசாயம் நடந்து வருகிறது. தென்னை, பாக்கு, பழ மரங்கள் இடையே ஊடு பயிராக மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கும். ஊடு பயிர் விவசாயத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் நீர் பாசன மேலாண்மை சிறப்பு
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டு காலமாக அறிவியல் பூர்வ நீர்பாசன மேலாண்மை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ச்சி அடைந்த நாட்டுக்காக விவசாய சூழலை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் மிக பழமையான அணைகள் உள்ளன
உலகத்தின் மிகப் பழமையான இன்றும் செயல்படும் அணைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
ஒரு ஏக்கர், ஒரு பருவம் என்ற அடிப்படையில் விவசாயம்
ஒரு ஏக்கர், ஒரு பருவ காலம் என்ற அடிப்படையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். ஒரு பருவ காலத்தில் ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை விவசாயம்- பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத்திட்டத்தில் முக்கிய பங்காக மாற்ற வேண்டும். இயற்கை விவசாயம் தொடர்பாக பரிசோதனைக் கூடங்களைஉருவாக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த வேண்டும்
இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையில் மாநில அரசு, விவசாயிகள், உற்பத்தி சங்கங்களின் பங்களிப்பு அவசியம். ஒரு ஏக்கரில் கிடைக்கும் பலனை பொறுத்து இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த வேண்டும். நாட்டில் 10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளை மின்னணு சந்தைகளில் நேரடியாக இணைக்க வேண்டும்.