ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பயணிகள் உயிரிழப்பு : ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!!
ஹைதராபாத் : ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்து தீ விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்தர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதே போல் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.