தொடக்க கல்வி பட்டயத் தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் விண்ணப்பிக்க 8ம் தேதி வரை அவகாசம்
சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய 8ம் தேதி வரை அவகாசம் அளித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் தங்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்கான விடைத்தாள் நகல்கள் கடந்த மாதம் 26ம் தேதி முதல் அரசுத் தேர்வுகள் இணைய தளமான www.dge.tn.gov.in என்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இயை தள முகவரியில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள தொகையை நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கண்ட விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யவும் மாணவ மாணவியருக்கு டிசம்பர் 8ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் ஒரு பாடத்துக்கு ரூ.205ம், விடைத்தாளின் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் ஒரு பாடத்துக்கு ரூ.505ம் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செலுத்த வேண்டும்.