கோயில் நகைகளை வங்கியில் அடமானம் வைத்த பூசாரி கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கோயில் நகைகளை வங்கியில் அடமானம் வைத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே முரிங்கூர் பகுதியில் நரசிம்மமூர்த்தி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு பகுதியை சேர்ந்த அஷ்வந்த் (34) பூசாரியாக இருக்கிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கோயில் நகைகளை நிர்வாகிகள் இவரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று பூசாரி அஷ்வந்திடம் கோயில் மேனேஜர் கூறினார். ஆனால் நிர்வாகிகள் அனைவரும் வந்தால்தான் நகைகளை காட்டுவேன் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று கோயில் நிர்வாகிகள் அனைவரும் சென்று நகைகளை கணக்கெடுக்க தீர்மானித்தனர்.
அப்போது தான் சில நகைகளை அருகில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக பூசாரி அஷ்வந்த் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக அவரைப் பிடித்து கொரட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காசு மாலை, வளையல் உள்பட 3 பவுன் கோயில் நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பூசாரி அஷ்வந்த் இதற்கு முன்பும் பணிபுரிந்த 2 கோயில்களில் இதேபோல நகைகளை திருடி வங்கியில் அடமானம் வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.