காலை, மாலை என 2 முறை விலை உயர்ந்தது பவுன் ரூ.99 ஆயிரத்தை நெருங்கியது
சென்னை: தங்கம் விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் 2 முறை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்தை நெருங்கி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவென உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,250க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.98 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதேபோல, காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கும், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் உயர்ந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்றது. நேற்று மாலையில் தங்கம், வெள்ளி விலை மேலும் உயர்ந்து நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது.
அதாவது, நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.98,960க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகப்பட்ச விலையாகும். அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2,530 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல நேற்று மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.16 லட்சத்துக்கு விற்றது. இதுவும் வெள்ளி விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதே நேரத்தில் வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் காலை, மாலை என கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.