ராணுவத்தின் எதிர்ப்பை மீறி சவுதிக்கு எப்-35 போர் விமானத்தை விற்பதற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்: சீனாவுக்கு கொண்டாட்டம்?
வாஷிங்டன்: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசர் முகமது பின் சல்மான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, சவுதி அரேபியாவுக்கு 48 எப்-35 போர் விமானத்தை விற்பனை செய்ய அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இது குறித்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘‘சவுதி அரேபியாவுடனான எப்-35 போர் விமானத்தின் விற்பனையை தொடர விரும்புகிறேன்’’ என்றார்.
உலகிலேயே அத்தனை நாடுகளும் மிகவும் விரும்பும் போர் விமானமாக எப்-35 இருந்து வருகிறது. இந்த விமானத்தை ஏற்கனவே தனது நட்பு நாடுகள் உள்ளிட்ட 19 நாடுகளுக்கு அமெரிக்கா விற்றுள்ளது. இந்த விமானத்தை வாங்க சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியா காத்திருக்கிறது. உலகளவில் தற்போதுள்ள போர் விமானங்களில் எதிரி நாடுகளால் கண்டறிய மிக மிக நவீனமான போர் விமானமாக எப்-35 இருந்து வருகிறது. இதனால் இதன் தொழில்நுட்பத்தை பெற சீனா பல வழிகளிலும் முயன்று தோற்றுள்ளது. சவுதி அரேபியா, சீனாவுக்கு மிகவும் நெருக்கமான நாடு.
எனவே, சவுதிக்கு எப்-35 போர் விமானத்தை தரும் பட்சத்தில் அதன் தொழில்நுட்பத்தை சீனா நேரடியாகவோ அல்லது ஹேக் செய்து மறைமுகமாகவோ கைப்பற்றக் கூடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அஞ்சுகிறது. எனவேதான் சவுதிக்கு இந்த விமானத்தை தரக்கூடாது என பென்டகன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதையும் மீறி டிரம்ப் விற்க ஒப்புதல் வழங்கி உள்ளார். அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, ஆயுத விற்பனை விவகாரங்களில் அதிபர் ஒப்புதல் அளித்தாலும் அதை நாடாளுமன்றத்தால் தடுத்து நிறுத்த முடியும். எனவே எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை டிரம்புக்கு எதிராக முன்னெடுக்க வாய்ப்புள்ளது.