தமிழகத்தில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை: விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
மீனம்பாக்கம்: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (2ம் தேதி) சென்னைக்கு வருகை தருகிறார். இதை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமான நிலையப் பகுதிகள் முழுவதிலும் 3 நாள் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை (2ம் தேதி) காலை 10.30 மணியளவில் கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்திறங்குகிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், அவர் 11.50 மணியளவில் காரில் புறப்பட்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.20 மணியளவில் புறப்பட்டு, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு மதியம் 1.35 மணிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து மறுநாள் (3ம் தேதி) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்து 9.35 மணிக்கு இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவாரூர் நீலக்குடி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று, அங்கு சிறப்பு தரிசனம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து ரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மீண்டும் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து இந்திய விமானப் படையின் தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். சென்னையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை 2 நாள் பயணமாக வருவதை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் பழைய விமானநிலையப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை சிறப்பு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், விமானநிலைய, உளவுத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, விஐபி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், சென்னை பழைய விமான நிலையத்தில் கார்கோ, கொரியர் அலுவலகங்களுக்கு கடுமையா ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் வரும் 3ம் தேதி இரவு வரை 3 நாட்களுக்கு பழைய விமானநிலையப் பகுதிகளில் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் என்று சென்னை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.