குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சரி பார்க்க மாட்டோம்: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்விலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஒன்பதாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது வாதத்தில்,\” ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் செய்வது அவசியமானது. இதனை எங்களது தரப்பில் இருந்து நீண்ட காலமாக நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டு வழக்கை பொருத்தமட்டில் கடந்த 2023ம் ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டு, 2025ம் ஆண்டுதான் தீர்ப்பு கிடைத்தது.
எனவே இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகளை நிராகரிக்க வேண்டும். மேலும் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த தீர்ப்புக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாது. அப்படி நடந்தால் அது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்து விடும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘முந்தைய தீர்ப்பை சரி பார்க்கும் விவகாரத்திற்குள் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அப்போது மீண்டும் வாதிட்ட வழக்கறிஞர் பி.வில்சன், ” குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் வழக்கின் தீர்ப்பிலேயே பதில்கள் உள்ளன. அவரது கேள்விகள் கொண்ட கடிதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து ஒன்றிய அரசு தரப்ப்பில் ஆஜரான சொலிசிட்டர். ஜெனரல் துஷார் மேத்தா, ஆளுநர் , உச்ச நீதிமன்றம் வழங்கிய கால நிர்ணயத்திற்குள் கட்டுப்பட வேண்டும் என்று எந்த அரசியல் சாசன விதிகளிலும் கிடையாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,\\” ஆளுநர் என்பவர் மாநில கூட்டாட்சிக்கும் மற்றும் ஜனநாயகத்துக்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா,\\” அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படை உரிமையாகும். அதனை மீறி யாரும் செயல்பட முடியாது. நாங்கள் அரசியலமைப்பில் எந்த இடையூறும் செய்யவில்லை என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் சில மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படாததற்காக அரசியலமைப்பை திருத்த வேண்டிய அவசியமில்லை.
தேவைக்கேற்ப அரசியலமைப்பை நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் மாற்ற முடியாது. மேலும் மசோதா விவகாரத்தில் ஆளுநர் வெறும் கையெழுத்து போடுபவர் என்ற வாதம் ஒருதலைப்பட்சமானது ஆகும். சில மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படாததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசியலமைப்பை திருத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.எஸ்.நரசிம்மா,\\” சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியவுடன், அதன் விளைவுகள் கருதப்பட வேண்டும். கூட்டாட்சி மற்றும் ஜனநாயகம் ஆகிய இரு கோட்பாடுகளின் அடிப்படையில் மசோதாவை புரிந்துகொள்ள வேண்டும். மசோதா ஆளுநரிடம் வரும்போது, அதன் ஆலோசனைகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டிய கடமை உள்ளதா?. அதேப்போன்று மேலும் ஆளுநர் ஒன்றிய அரசின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக கருதினால், சட்டமன்றம் மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது.
மசோதா மறுநிறைவேற்றம் செய்து திரும்பி அனுப்பி வைத்த பின்னர், அதை மீண்டும் குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பும் வாய்ப்பு ஆளுநருக்கு உண்டா ஆகிய கேள்வி எழுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் அரசியலமைப்பின் 200வது மற்றும் 201வது பிரிவுகளை இணைத்து வாசிக்க வேண்டும் என்பதாக கருத்து அமைந்துள்ளது. அதேநேரத்தில் ஒரு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இரண்டாவது முறையாக செல்லும்போது, அவர் அதனை தடுத்தோ அல்லது நிறுத்தியோ வைக்க முடியாது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் முக்கியமாக சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க நான்கு ஆண்டுகள் வரை தாமதம் செய்தது ஏன்?. அதற்கான காரணம் என்ன, அதனை ஏன் மசோதாவை நிறைவேற்றிய மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று ஒன்றிய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதையடுத்து அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா,\\” கடந்த 1970ம் ஆண்டு முதல் 90சதவீத மசோதாக்கள் குறுகிய காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு பல மாநிலங்களில் நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
இதற்கு முன் ஆளுநர்கள் இப்படி நடந்து கொண்டது கிடையாது. அதேப்போன்று ஒப்புதல் வழங்காமல் வைத்திருக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் ஆளுநர்கள் வெளிப்படையாக அறிவித்தது கிடையாது. ஆனால் வரலாற்று பிழையாக தற்போது மட்டுமே ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆளுநர் அதிகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகும் என்று காட்டமாக தெரிவித்தார்.